Thursday, June 25, 2020

அன்பே சிவம்!

குறை கூறும் மாந்தர்க்கு
கிட்டாது புண்ணியம்
கோயில் குளமென்று
குதித்தோடி களைத்தாலும்..

கூடி இருப்போரின்
மனம் கோணாக் கனிவோடு,
கூறு நீ நல்வார்த்தை
புண்ணியம் கோடி வரும்!

வசை பாட பலருண்டு,
வழி காட்ட வெகு சிலரே!
குறையில்லா மனிதனில்லை,
கற்று விடு கருணை தர!

Sunday, February 20, 2011

முதல் சந்திப்பு!

தூரத்தில் அவன் தெரிந்ததும் ஒரு படபடப்பு..
முதல் முறை அவனை மிக அருகில் பார்த்தேன்..
பார்வைகள் மோதியதில் குட்டி வெட்கச் சிரிப்பொன்று எட்டிப்பார்த்தது..
அவன் குரலை விட அழகோ அவன் "கண்கள்"??

எதிரில் கை காட்டிவிட்டு அருகில் வந்தமர்ந்தான்
வாரி அணைத்தது அவன் வாசனை..
கஷ்டப்பட்டு கட்டுப்படுத்தினேன் என் கால்ப் பறவைகளை..

பாதி நேரம் கண்களைத் தவிர்த்த மௌனமும்..
மீதி நேரம் குழம்பில் உப்பில்லையென்றும்..
கிழங்கில் காரமில்லையென்றும் சப்பையாய்க் கழிந்தது..
ஒவ்வொரு கவளமும் கோலிகுண்டாய் இறங்கியது..

எதற்கோ வேகமாய் திரும்பினேன்...
விரல்கள் உரசிய வெப்பம் பிடித்தது..
அதை அவன் ஓரக் கண்ணால் பார்த்த விதமும் பிடித்தது..

புதிதாய் நகம் கடித்தேன்..
பத்து முறை கடிகாரம் பார்த்தேன் ..

பில் வந்தது.. பிரியும் நேரமும் வந்தது..
விடை பெறக் கொடுத்த கைகளை திருப்பி வாங்கத்தான் வேண்டுமா???

Saturday, February 19, 2011

முதல் தொலைப் பேச்சு!

மொட்டை மாடியில்..
தவளைக் கத்தலும்.. கும்மிருட்டும்... குளிர்க் காற்றும்..
கண்ணடித்த பல விண்மீன்களும்..
மிதந்து கொண்டே என்னை கடந்து சென்ற மேகங்களும்..
ஊடே கண்ணாமூச்சி ஆடிய அந்த வட்ட வெள்ளைக்காரியும்..
அவசரமாய் ஒதுங்க வந்து எனைப் பார்த்து பயந்த அறைத் தோழியையும்..
கற்பனையில் கொலுசொலியையும் மீறி...

பிறந்தது.. வளர்ந்தது..
பிடித்தது.. பிடிக்காதது..
அம்மாவிலிருந்து அத்தை வரை...
பக்கத்து வீட்டு கோலத்திலிருந்து..
பாசமான தோழி வரை...

பேசி பேசி நாவறண்டு நீர்க்குடிக்க ஓடினேன்...
சுள்ளென்று ஒரு முறை முறைத்தான் சூரியன்..
புரிந்தது ஒரு இரவில் சுய சரிதை சாத்தியமே என்று..

அணைக்க மனமில்லாமல் அணைத்தேன் என் கைபேசியை..
அரை மணி நேரம் இருந்தது அலுவலகத்திற்க்கு கிளம்ப..
மெத்தையில் படுத்து அசை போட்டேன்...
நமது முதல் தொலைபேசி உரையாடலை..

கொஞ்சம் கட்டை தான் ஆனாலும் ஒரு இனம்புரியா ஈர்ப்பு.. "அவன் குரலில்"

Sunday, January 18, 2009

பிரிவெதற்கு??

மனதில் நான் இல்லை என்றால்,
மணிப்பர்ஸில் என் படமெதற்கு??

நினைவில் நான் இல்லை என்றால்,
உன் விழியில் நீரெதற்கு??

கனவில் நான் இல்லை என்றால்,
பின்னிரவில் விழிப்பெதற்கு??

எங்கும் நானே தெரிந்தால்,நம் பிரிவெதற்கு??
வந்தெனைச் சேர்ந்திடு, விலகாமல் வாழ்வதற்கு!!

திருப்பிக் கொடு!!

நான் எழுதிய கடிதங்கள் வேண்டாம்,
கலைந்த என் கனவுகளைத் தந்து விடு;

என் புகைப்படங்கள் வேண்டாம்,
புன்னகையைத் திருப்பிக் கொடு;

உன் "நினைவுகளை" வேண்டாம்,
காதலை மட்டும் கொண்டு செல்!!!

எனது சொர்க்கம்!!

துரத்தும் அவன் நினைவுகள்,
மாறும் மனித உறவுகள்,

மாதம் பிறந்தால் இறுக்கும் பண நெருக்கடிகள்,
உயிர் உருக்கும் பல குழப்பங்கள்;

இவை எதுவுமே அங்கு இல்லையாம்;
அழைத்துச் செல் ஆண்டவனே
அந்த அழகான சொர்க்கத்திற்கு!!

Friday, January 16, 2009

வானிலை அறிக்கை!!

உலர்ந்து போன என் விழிகளைக் கண்டு
வறண்ட வானமும் மனமிறங்கியதோ??

"சென்னை"யிலே இடியுடன் கூடிய
பலத்த மழையாம்!!